பிரஜைகளது சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதிக்கமுடியாது.இது சட்டத்திற்கோ நீதிக்கோ ஏற்ப்புடையதல்ல என்று வெடுக்குநாறிமலை விடயத்தில் நீதவான் தீர்ப்பளித்ததாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. குறித்த வழக்கில் ஆலயம்சார்பாக முன்னிலையாகிய சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா வழக்கின் தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது….
கடந்த தவணையில் பொலிஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தையும் நாம் ஆட்சேபித்தோம், சட்டம் எந்த விதத்திலும் அங்கு மீறப்படவில்லை, என்ற விடயத்தினை வலியுறுத்தினோம். அத்துடன் தொல்பொருட்கள் கட்டளைச்சட்டம் மற்றும் அதுதொடர்பில் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை உற்றுநோக்கும் போது இந்த விடயத்திற்கு பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இருப்பினும் குறித்த கட்டளைச்சட்டத்தின் பிரிவு15உப பிரிவு சி யினை சுட்டிக்காட்டிய பொலிஸ் தரப்பு அதன் கீழ் விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்று கோரியது. அந்த நிலையில் இதன் விசாரணைகள் விரைவாக முடிவுறுத்தப்பட்டு,பொலிஸ்தரப்பால் குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல்செய்யப்படுவதற்கு மன்றானது ஒருவாரகால அவகாசத்தை வழங்கி இன்றுவரை(19) கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இன்று குறித்த வழக்கு அழைக்கப்பட்டபோது, சட்டமாஅதிபரின் ஆலோசனையினை பெறவேண்டியுள்ளது. அத்துடன் வழக்கின் விசாரணை கோவையினை சட்டமாஅதிபரின் பரிசீலனைக்காக அனுப்பவேண்டி இருக்கின்ற காரணத்தினால் குற்றப்பத்திரத்தை தாக்கல்செய்ய முடியவில்லை என்று பொலிசார் நீதிமன்றில் தெரிவித்தனர். குறிப்பாக சந்தேகநபர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தினை இந்த அடிப்படையில் செய்தனர். எனினும் சந்தேகநபர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் நீதிமன்ற கட்டளையூடாக விளக்கமறியல் உத்தரவு பெறப்படும்போது அவர்களுடை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
அவ்வாறு கட்டுப்படுத்தப்படும் போது அது சட்டத்திற்கு அமைவாகவே செய்யப்படமுடியும். அத்துடன் பொலிசார் கூறியபடி குற்றப்பத்திர தாக்கலை இன்று செய்யாமல் சட்டமா அதிபரின் அறிவுரைகளை இப்போது நாடுவது, இந்த வழக்கின் சட்ட அடிப்படைத் தொடர்பிலே அவர்கள் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பதை காட்டுகின்றது. எனவே இருட்டு அறைக்குள்ளே கறுப்பு பூனை ஒன்றை தேடுவது போன்ற நிலையினைத்தான் குற்றச்சாட்டினை வடிவமைக்கும் விடயத்திலே பொலிசார் இருக்கின்றார்கள் என்பதை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். எங்கள் தரப்பிலே செய்யப்பட்ட பல்வேறு சமர்ப்பணங்களுடன், ஏற்கனவே மேல் முறையீட்டு நீதிமன்றிலே விளக்கமறியல் உத்தரவு ஒன்று நீடிப்பது தொடர்பாக வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பினைசுட்டிக்காட்டி எங்கள் தரப்பின் விண்ணப்பத்தினை பரிசீலித்த நீதவான்.
குற்றப்பத்திரம் தாக்கல்செய்யாமல் சட்டமா அதிபரின் ஆலோசனையினை நாடியிருப்பது தொடர்பில் பல்வேறு கேள்விகளை பொலிசாரிடம் எழுப்பியிருந்தார். குறிப்பாக தண்டனைச்சட்டக்கோவையின் கீழே பல்வேறு பிரிவுகள்,பிணை மறுக்கப்படுகின்ற தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் பல பிரிவுகளை சுட்டிக்காட்டியதுடன், முதல் அறிக்கையிலும் குறிப்பிட்டு கடந்ததவணையிலும் குறிப்பிட்ட பொலிஸ் தரப்பினர் இன்றையதினம் புதிதாக இந்த நிலைப்பாட்டினை எடுத்திருப்பது தொடர்பிலே நீதவான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இறுதியில் அனைத்து சமர்ப்பணங்களின் முடிவிலே விபரமான தீர்ப்பினை வழங்கியிருக்கின்றார். அதாவது இந்த சந்தேகநபர்களை பிணை மறுக்கப்படுகின்ற தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் பிரிவு15சியினை பயன்படுத்தி, தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்கு ஏதுவாகவே பொலிசார் இந்த விண்ணப்பத்தினை செய்திருக்கின்றார்கள் என்கிற தன்னுடைய கருத்தினை நீதவான் திட்டவட்டமாக வெளிப்படுத்தினார்.
இவ்விதம் பிரஜைகளது சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதிக்கமுடியாது. இது சட்டத்திற்கோ நீதிக்கோ ஏற்ப்புடையதல்ல. குற்றம் சாட்டப்படும் ஒவ்வொருநபரும் குற்றம் நிரூபிக்கப்படும் வரையிலே நிரபராதியாக கொள்ளப்படவேண்டும் என்பதே நீதிநெறியின் அடிப்படைகோட்பாடு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நாங்கள் கோரியவாறு இந்த வழக்கின் நடவடிக்கைகளில் இருந்து அனைத்து சந்தேகநபர்களையும் விடுவித்து அல்லது விடுதலை செய்து கட்டளை வழங்கினார். என்று தெரிவித்தார். குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா,அன்ரன் புனிதநாயகம்,திருஅருள்,க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.