மஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வேண்டுமென்றே வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என்றார்.
பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஒழுங்கு பிரச்சினை எழுப்பி கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி அன்று இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின்போது குறித்த எட்டுபேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கினை நடத்த பொலிஸார் கால அவகாசம் கோரியிருந்தனர்.
இருப்பினும் பொலிஸாரினால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான ஆவணங்களும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியாததையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து எட்டுபேரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா,அன்ரன் புனிதநாயகம்,திருஅருள்,க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.