Sunday, May 19, 2024

சாந்தனுக்கு கிட்டாது போன நீதி…! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அறிக்கை

சாந்தன் எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் கடந்த 33 வருடங்களாக கொடும் சிறைவாசத்தை அனுபவித்து கொலை செய்யப்பட்ட மாவீரன் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ரொபட் பயஸ் ஜெயக்குமார் முருகன் ஆகியோரை இந்திய மத்திய அரசும் மாநில அரசும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் (03.03.2024) அன்று சாந்தனின் மறைவுக்காக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாவீரன் சாந்தன் ஒரு இலட்சியப் போராளி. தன் இனத்திற்காக, இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்க்கைக் காலத்தின் 33 ஆண்டுகள் சிறையில் தன்னை மெல்ல மெல்ல உருக்கினான். இறுதி மூச்சு நிற்கும் வரை ஈழத்தமிழர்களை நேசித்து, தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த மாவீரன்.

எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் கடந்த 33 வருடங்களாக கொடும் சிறைவாசத்தை அனுபவித்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட போதும், சிறப்பு முகாம் எனும் போர்வையில் சிறை மாற்றம் செய்து அடைத்து வைத்து மிகக் கடுமையான உடல் உபாதைக்கு உட்படுத்தப்பட்டு சாந்தன் அவர்கள் 28.02.2024 அன்று கொல்லப்பட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாம் ஏனைய சிறைகளை விட கொடுமையானது. புழல் சிறையிலிருந்து ரொபட் பயஸ், மற்றும் ஜெயக்குமாரும், வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமுக்கு 11.11.2022 அன்று மாற்றப்பட்டனர்.

நாட்டை விட்டு அனுப்பும் வரை சிறப்பு முகாமில் வைத்திருக்கின்றோம் என்றார்கள். இன்று வரை நாட்டை விட்டு அனுப்புவதற்கு எந்த முன்னெடுப் புகளும் எடுக்கப்படாமல் சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள். நாம் சாந்தனை இழந்து விட்டோம்.

இனியும் எங்களது உறவுகளான ரொபட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோரை இழக்க முடியாது. இந்திய மத்திய அரசும்,மாநில அரசும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களை எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலைசெய்து, அவர்களது உறவினர்கள் வாழும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, மிகுதிக்காலத்தை அவரவர் குடும்பத்துடன் வாழ ஆவன செய்ய வேண்டுமென இந்த இக்கட்டான சூழலில் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.

“உன்னத இலட்சியத்திற்காக உயிர் நீத்த மனிதர்களை சாவு அழித்து விடுவதில்லை நமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடம் உண்டு” எனும் தேசியத் தலைவரின் கூற்றுக்கு அமைய தமிழ் மக்கள் அனைவரதும் நினைவுகளில் மாவீரன் சாந்தன் என்றென்றும் வாழ்வான்.

அவரது பிரிவால் துயரற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் ஆகிய நாம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இவரின் விடுதலைக்காக சட்ட ரீதியிலும் அற வழியிலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட தாய்த்தமிழக உறவுகளின் கரங்களையும் இறுகப் பற்றிக் கொண்டு, அவர்களின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular