வவுனியாவில் பதற்றம் : இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

48

வவுனியா – கனகராஜன் குளப்பகுதியில் உள்ள கரப்பு குத்தி குளத்தினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் இராணுவத்தினருக்கும், மீனவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12.09) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  கரப்புக்குத்தியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக விலைக்கோரல் அடிப்படையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கரப்புக்குத்தி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வலைகளைப் போட்டு சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  குளத்தினை  குத்தகைக்கு எடுத்தவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என இராணுவத்திற்கு தெரியப்படுத்தி இருந்தனர். எனினும் இராணுவத்தினர் தொடர்ந்து மீன்பிடித்து வந்துள்ளனர்.

இதனையறிந்த குளத்தை குத்தகைக்கு எடுத்த நபரும் அவரது நண்பரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இராணுவத்தினர் மீன்பிடிப்பதை தடுத்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட கைகலப்பில் கரப்புக்குத்தியைச் சேர்ந்த சிறீதரன் சுஜீபன் (29) எனும் இளைஞன் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை இராணுவத்தை சேர்ந்த ஒருவரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.