Thursday, May 16, 2024

வவுனியாவில் விவசாயிகளை ஏமாற்றிய தனியார் நிறுவனம்!

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் உள்ள 8 விவசாயிகளிடம் உளுந்தை கொள்வனவு செய்துவிட்டு 20 இலட்சம் ரூபாய் பணத்தை கொடுக்காது கிறீன் லங்கா பிறைவேட் லிமிடெட் ஏமாற்றியுள்ளதாக விவசாயிகள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வடக்கு பகுதியை மையமாக கொண்டு இயங்கும் கிறீன் லங்கா பிறைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனம் ஊடாக வவுனியா தாலிக்குளம் விவசாயிகளுக்கு செய்கை பண்ணுவதற்காக உளுந்து வழங்கப்பட்டுள்ளது.

அறுவடை முடிந்த பின் தாம் வழங்கிய உழுந்தையும், அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு விவசாயிகளும் வழங்க வேண்டிய உளுந்தையும் குறித்த நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

அதன்பின், விவசாயிகளுடம் இருந்த மேலதிக உளுந்தை நியாய விலையில் பெறுவதாக கூறி கிலோ 1000 ரூபாய் படி 8 விவசாயிகளிடம் 20 ஆயிரம் கிலோ உழுந்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதிக்கு குறித்த நிறுவனம் பெற்றுக் கொண்டதுடன், அதற்கு பற்றுச்சிட்டை வழக்கி குறிப்பிட்ட ஒரு மாத காலத்திற்குள் பணம் தருவதாக எழுத்து மூலம் வழங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட திகதிக்குள் பணம் வழங்காமையால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் குறித்த நிறுவனத்திடம் சென்று பணத்தை கேட்ட போது சாட்டுப் போக்குகள் கூறி விவசாயிகளை அலைக் கழித்துடன், வவுனியா, முதலாம் குறுக்கு தெருவில் உள்ள அலுவலகத்தையும் மூடி வைத்துள்ளனர்.

நிறுவன வவுனியா பணிப்பாளரும் உரிய வகையில் பதில் அளிக்காமையால் பாதிக்கப்பட்டவர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தமக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை எனவும், பொலிசார் குறித்த நிறுவன பணிப்பாளர் கூறும் சாட்டுப் போக்குகளை தமக்கு கூறி தம்மை அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

8 விவசாயிகளிடம் இருந்து 20 ஆயிரம் கிலோ உழுந்து பெறப்பட்டுள்ளதுடன், 20 லட்சம் ரூபாய் பணம் இதன் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாமும் தமது குடும்பமும் பல்வேறு நெருக்கடிக்குள் முகம் கொடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விசாயிகள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

Most Popular