Tuesday, May 21, 2024

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தபோது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றியிருந்தனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும். தொடர் குடியிருப்புகளை கிராமங்களாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எனது ஆட்சியின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் காலத்திலும், பொருளாதார நெருக்கடியிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களே அதிக துயரத்தை அனுபவித்தனர். அவர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கடும் துயரத்தை அனுபவித்த போதிலும், தேயிலை உற்பத்தி ஊடாக எமக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ரூபாவின் பெருமதி அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி 290 ரூபா வரை செல்லும். இதன் பயன் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நேற்று நள்ளிரவு 1700 நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular