Monday, May 20, 2024

வவுனியாவில் அதிபரால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவருக்கு நேர்ந்த துயரம்!

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாத குழந்தையொன்றுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனது மகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் வாய்ப்பை மறுத்த, ஆசிரியர்கள் புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமில்லை என கூறியதாக சிறுவனின் தாய் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் கடந்த 08 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு, கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனே பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பை இழந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மகனின் வயிற்றில் சத்திர சிகிச்சை செய்ததால் சுமார் இரண்டு மாதங்கள் அவரால் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை எனவும், ஒக்டோபர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதால், அதற்கு முதல் வாரத்தில் இருந்து மீண்டும் பாடசாலைக்கு சென்றதாகவும் தயார் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சுட்டெண் குறித்து விசாரிக்க பாடசாலைக்குச் சென்ற தாயாருக்கு, இந்தக் சிறுவனுக்கு பரீட்சையை எதிர்கொள்ள சந்தர்ப்பம் வழங்க முடியாது என பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச ஊடகவியலாளர்களிடம் பாடசாலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விபரித்த தாய் மகேந்திரன் ஜனனி, தனது பிள்ளை பரீட்சைக்குத் தோற்ற முடியாது என பாடசாலை நிர்வாகம் தன்னிடம் இருந்து கடிதம் எழுதிப் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அதிபரிடம் வினவியபோது அவர் 70இற்கும் குறைவாக புள்ளிகளை பெறுவதாகவும், ஆகையால் பரீட்சையை எழுத முடியாது எனத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் நாங்கள் அதனையே அப்படியே விட்டுவிட்டோம். கூப்பிடுவார்கள் என நம்பி காத்திருந்தோம். கூப்பிடவில்லை. உடைகள் எல்லாம் தைத்து ஆயத்தமாகவே இருந்தோம். ஒரு கிழமைக்கு பின்னர் பாடசாலைக்கு அழைத்சதுச் சென்றபோது சிவநாதன் ஆசிரியர் அவரை அடித்து பரீட்சை எழுத விடமாட்டேன் எனக் கூறினார். அப்போது அதிபரும், ஆசிரியையும் பார்த்துக்கொண்டிருந்தனர். எதுவும் கூறவில்லை.

அதனைவிட என்னிடம் கடிதம் ஒன்றை எழுதி வாங்கினார்கள். இவருக்கு வருத்தம் பரீட்சை எழுத முடியாது எனஎழுதி வாங்கிக்கொண்டார்கள். இவர் பாடசாலைக்கு வருவதும் குறைவு என்றார்கள். அவர் எழுதியும் பிரயோசனம் இல்லை. புலமைப்பரிசில் பரீட்சையும் முக்கியமில்லை” என அதிபர் தரப்பில் கூறப்பட்டதாக தயார் தெரிவித்துள்ளார்.

ஏதாவது காரணத்தினால் இந்த சிறுவன் பரீட்சையில் சித்தியடையாமல் போகும் பட்சத்தில், அதனை பாடசாலைக்கு அவமரியாதையாக கருதி பாடசாலை அதிபர் இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

Most Popular