வடமாகாணத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று – 30 வீடுகள் தனிமைப்படுத்தல் – முடக்கப்படுமா ?பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி தெற்கில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்று வழியைக் கண்டறிவதற்கான துரித நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

தொற்றாளரான இளைஞருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அதற்கமைய பருத்தித்துறையில் இதுவரை 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கொரோனாத் தொற்றின் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவினரின் அறிக்கை கிடைத்ததன் பின்னரே பருத்தித்துறை பிரதேசத்தை முடக்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தைத் தம்மால் எடுக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட அரச அதிபர் கூறினார்.

பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட புலோலி தெற்கு இளைஞருக்குக் கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் அவருக்குத் தொற்று ஏற்பட்ட வழி தொடர்பில் சுகாதாரப் பிரிவினரால் இதுவரை அடையாளப்படுத்த முடியாதுள்ளதால் புதிய கொரோனாக் கொத்தணி ஒன்று உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2ஆம் திகதி மந்திகை ஆதார மருத்துவமனையில் தடிமன் மற்றும் காய்ச்சல் காரணமாக குறித்த இளைஞர் சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையின் 7ஆம் இலக்க வார்ட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொரோனாத் தொற்று சந்தேகத்தில் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்றுமுன்தினம் கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்த நிலைமை காணப்பட்டதை அடுத்து, அவருக்கு மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த முடிவு நேற்று மாலை கிடைத்த நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த தொற்றாளர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதில் தெளிவில்லாத நிலைமை காணப்படுகின்றது. அவரிடம் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் மூன்று தினங்களுக்கு முன்னர் மருதனார்மடம் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவர் அங்குள்ள வாகனச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்றார் என்றும், அருகில் உள்ள கடை ஒன்றில் தண்ணீர் வாங்கிக் குடித்தார் என்றும் சுகாதாரப் பிரிவினரிடம் கூறியிருக்கின்றார்.

தொற்று ஏற்பட்டு 3 நாட்களுக்குள் இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதால் தொற்று எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகங்கள் உள்ளன என்று சுகாதாரப் பிரிவினர் கூறுகின்றனர்.

கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் பல இடங்களிலும் நடமாடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அவர் நடமாடியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் அறிய முடிந்துள்ளது.

தொற்றாளர் நெல்லியடியில் உள்ள டயலொக் அலுவலகத்துக்கும் சென்றிருந்ததால் அந்த அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மந்திகை ஆதார மருத்துவமனையின் 7ஆம் இலக்க வார்ட்டில் தங்கிச் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், மருத்துவர், தாதியர், சிற்றூழியர் என 7 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டு வருவதால் யாழ். மாவட்டத்துக்குள் நுழையும் சகல பாதைகளிலும் துரித அன்டிஜன் பரிசோதனைகள் ஆரம்பமாகவுள்ளன எனவும், அதற்கான ஆய்வுகளை சுகாதார அமைச்சு தற்போது மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி ஆனையிறவு மற்றும் கேரதீவு பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் யாழ். மாவட்டத்துக்குள் நுழையும் சகலருக்கும் நடத்தப்படும் எனவும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு மிகத் துரிதமாக அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட அரச அதிபர் மகேசன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே யாழ். ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்று 496 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் யாழ்.மாவட்டத்தில் இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 5 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

hey