வவுனியாவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி அறுப்பு ; மோட்டர் சைக்கிளுடன் இருவர் கைதுவவுனியாவில்

வவுனியாவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மோட்டர் சைக்கிளுடன் இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மதியம் மோட்டர் சைக்கிளில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பிறிதொரு மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் குறித்த பெண் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அன்றையதினம் மாலை வவுனியா, வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதியில் மோட்டர் வைக்கிளில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பிறிதொரு மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

இவ்விரு சடம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு அவர்களின் வழிகாட்டலில் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதீப் தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட துரித விசாரணைகளையடுத்து சங்கிலியை அறுத்துச் சென்ற குற்றச்சாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அறுக்கப்பட்ட இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

hey