வவுனியா நொச்சிமோட்டை புதிய சின்னக்குளம் வீதியில் பாலம் அமைக்கப்படாமையினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் மக்கள்வவுனியா நொச்சிமோட்டை புதிய சின்னக்குளம் வீதியில் பாலம் அமைக்கப்படாமையினால் அவ்வீதியூடாக பயணம் செய்யும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள நொச்சிமோட்டை குளம் தனது முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அதன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி குறித்த பாதையூடாகவே வெளியேறி செல்கின்றது. இதன்போது பாதையில் 4 அடிக்கு மேல் நீர் நிரம்பிக்காணப்படும். இதனால் இவ்வீதியை பயன்படுத்தும் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே தமது பயணங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பாதையினை மாமடு, கள்ளிக்குளம், துவரங்குளம், சின்னப்புதுக்குளம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மழை காலங்களின் போது குளம் நிறைந்தால் இந்த வீதியால் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்கள் கூட இந்த பாதையூடாகவே பிரதான பாதையினை அடைகின்றனர். இது தொடர்பாக அரசியல் வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பலமுறை தெரியப்படுத்தியும் எவரும் இதற்கான தீர்வினை பெற்றுதரவில்லை.

எனவே பலவருடங்களாக நீடித்து வருகின்ற இப்பிரச்சனைக்கு பாலம் ஒன்றை அமைத்து தீர்வினை பெற்றுத்தருமாறு அதனூடாக பயணிக்கும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

hey