வவுனியாவில் 140 பேரின் காணிகள் ரத்து : ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்புவவுனியாவில்

வவுனியாவில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் மற்றும் ஓமந்தையில் அரச ஊழியர்களிற்காக வழங்கப்பட்ட காணிகள் என்பவற்றில் குடியிருக்காதவர்களது காணிகள் அனைத்தையும் ரத்து செய்து காணி அற்றோருக்கு வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் காணி அற்ற 600இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

எனினும் 600 பேர் வரையில் குறித்த பகுதியில் காணிகளை பெற்றுக் கொண்ட நிலையில் வெறும் 80 குடும்பங்கள் மாத்திரமே அப்பகுதியில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

200 பேர் வரையில் பகுதியளவில் வீடுகளை அமைத்துள்ளதுடன், ஏனையோர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் குறித்த காணிகள் பற்றைக்காடுகளாக வளர்ந்து காடுமண்டி கிடக்கிறது. அத்துடன் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலும் அரசின் வீட்டுத்திட்டங்களை பெற்றுவிட்டு அங்கு மக்கள் குடியிருக்காத நிலைமை காணப்படுகின்றது.

குறித்த விடயங்கள் தொடர்பாக நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், குறித்த காணிகளை உடனடியாக ரத்து செய்து விட்டு, ரத்து பத்திரத்தை ஒட்டுமாறும் அந்த இருப்பிடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ள காணி அற்றோருக்கு வழங்குமாறும் பணித்துள்ளார்.

இதேவேளை முதற்கட்டமாக ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ளாத 140 பேரின் காணிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை ரத்துப் பத்திரம் ஒட்டப்படவுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிரச்சினைகள் ஓமந்தை பகுதியை விட வவுனியாவின் ஏனைய பிரதேசங்களிலும் அதிகமாக உள்ள நிலையில் அதனையும் கருத்தில் கொள்ளுமாறு ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கு.திலீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை ஆராய்ந்த ஆளுநர் மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இப்படியான வீடுகள் காணிகள் இருந்தால் அவை அனைத்தையும் உடனடியாக ரத்து செய்து காணி அற்றோருக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

hey