வவுனியாவில் புயலுடன் கூடிய மழையினால் 20 பேர் பாதிப்பு : 5 வீடுகள் சேதம்வவுனியாவில் புயலுடன் கூடிய மழையால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் மாலை மற்றும் இரவு வேளைகளில் கடும் காற்றும் வீசியிருந்தது.

இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கூமாங்குளம் மற்றும் நொச்சிமோட்டை ஆகிய பகுதிகளில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அவுசதப்பிட்டிய கிராமத்தில் ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்வாறாக 05 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன், வவுனியா வடக்கில் தற்காலிக வீடுகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகளில் வாழ்ந்த 69 குடும்பங்களைச் சேர்ந்த 216 பேர் பாதுகாப்பிற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

hey