வவுனியாவில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு இலவச குடிநீர் வழங்கிய நபர்வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையத்தில் இரு தினங்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மாவீரர் தின வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல மாவட்டங்களில் மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் செ.அரவிந்தன் அவர்களுக்கு மாவீரர் தினம் தொடர்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

அவர் தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் இறந்த தனது உறவுகளை தான் நினைவு கூரவுள்ளதாக தெரிவித்து அவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக கம்பங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்க விட்டுள்ளதுடன் 26 மற்றும் 27ம் ஆகிய இரு தினங்களுக்கு இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் வழங்கி வருகின்றார்.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

hey